மதுரை காமாட்சி

இறைவன் காமாட்சி, ஏகாம்பரேஸ்வரர்
தல மரம் மாமரம்
கிராமம்/நகரம் மதுரை
மாவட்டம் மதுரை
மாநிலம் தமிழ்நாடு
வரலாறு
                   மதுரை மீனாட்சி கோயிலுக்கு தெற்கே முற்காலத்தில் மாந்தோப்பு இருந்தது. அந்த தோப்பில் வனகாளி இருந்து வந்தாள். இந்த காளியை விஸ்வகர்ம குல மக்கள் வழிபட்டு வந்தனர். ஒரு முறை இந்த கோயில் பூஜாரி இரவு பூஜைக்கு பின், மறதியாக தன் மகனை இந்தக் கோயிலுக்குள் வைத்து பூட்டிவிட்டு வீட்டிற்கு வந்து விட்டார். வீட்டிற்கு வந்தவுடன் பூஜாரியின் மனைவி, மறந்து விட்டு வந்த தன் மகனை மீண்டும் அழைத்து வர வேண்டும் என்று கூற, பூஜாரியும் மகனை அழைக்க பூட்டிய கதவை திறந்தார். அங்கு காளியின் உக்கிரம் தாங்க முடியாத பூஜாரி அதே இடத்தில் இறந்தார்.

பின் காளிக்கு பெரிய அளவில் கோயில் கட்ட நினைத்து, அங்குள்ள மாமரத்தின் அடியில் தோண்டினார்கள். அப்போது சுயம்புவாக ஈசன் தோன்றினார். “ஆம்ர’ என்றால் வடமொழியில் “மாமரம்’ என்று பொருள். மாமரத்தின் அடியில் பாணலிங்கம் தோன்றியதால் இங்குள்ள ஈசன் ஏகாம்பரேஸ்வரர் ஆனார். எனவே காளிக்காக கட்ட நினைத்த சன்னதி, சிவ ஆகம விதிப்படியும், பிரம்மனுக்காக மீனாட்சி கொடுத்த வாக்கின் படியும், காமாட்சி சமேத ஏகாம்பரேஸ்வரர் சன்னதியாக மாறியது.

திருவிழா

                   நவராத்திரி, கார்த்திகை மாதத்தில் சுவாமி, அம்மன் திருவீதி உலா, மார்கழி மாதத்தில் தனுர் மாத விழா, திருவாதிரை ஆருத்ரா தரிசனம், தை மாத சங்கராந்தி.
சிறப்பு
                    இத்தலத்தில் சிவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
திறக்கும் நேரம்
                  காலை 6.30 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
பொது தகவல் : இந்த உலகின் ஆதி நாயகி பராசக்தி. இந்த பூமியில், பராசக்தியான நான் தனியாக இருந்து எப்படி ஆளப்போகிறேன் என்று நினைத்து முதலில் பிரம்மனை படைக்கிறார். பிரம்மனும் பராசக்தியை வணங்குகிறார். பின் விஷ்ணுவை படைக்கிறார். விஷ்ணுவும் பராசக்தியை வணங்குகிறார். அதன் பின்னரே சிவனை படைக்கிறார்.

சிவனோ பராசக்தியை கண்டு வணங்காமல், அவரது கண் அழகில் மயங்கி சிரிக்கிறார். (காமாட்சி என்பது ஆசையை உண்டு பண்ணக்கூடிய அட்சி(கண்). இருந்தாலும் பராசக்தியால் படைக்கப்பட்ட பிரம்மனும், விஷ்ணுவும் வணக்கம் தெரிவிக்க நாம் மட்டும் வணங்காமல், அவளது அழகை கண்டு மயங்கி சிரித்து விட்டோமே என நினைத்து சக்தியிடம் நீயும் என்னை விரும்பினால், என்னில் பாதியாக இருக்க வேண்டும் என்றவுடன் சக்தியும் சம்மதித்து சிவனின் பாதியாக கலந்து விட்டார்.

பிரம்மனின் கர்வம்: முன்பொரு சமயம் மீனாட்சிக்கும், சுந்தரேஸ்வரருக்கும், மகா விஷ்ணு தாரை வார்க்க, பிரம்மன் திருமணத்தை நடத்தி வைத்தார். திருமணத்தை நடத்திக் கொடுத்த பிரம்மனுக்கு தட்சணையாக என்ன வேண்டும் என சிவன் கேட்டார். அதற்கு பிரம்மன் கர்வத்துடன், என் சிருண்டிக்கு கட்டுப்படாததை எனக்கு தட்சணையாக தர வேண்டும் என பரிகாசம் செய்தார். சிவனும் பிரம்மனின் கர்வத்தை அடக்க, “”உமது சிருஷ்டிக்கு கட்டுப்படாத தரித்திரத்தையே உமக்கு தட்சணையாக தருகிறோம்,” என்ற கூறிச் சென்றார்.

இதனால், அதிர்ச்சியடைந்த பிரம்மன் அன்னை மீனாட்சியிடம், “”தாயே! ஈசன் எனக்கு இப்படி ஒரு விபரீதமான தட்சணை தந்து எனது கர்வத்தை அடக்கி விட்டார். எனது இந்த தரித்திரத்தை தீர்க்க ஒரு வழி கூற வேண்டும்,” என வேண்டினார்.
அன்னை மீனாட்சியும், “”பிரம்மனே!, தாங்கள் இது குறித்து கவலைப்பட வேண்டாம். நான் இந்த மதுரை மாநகரில் காமாட்சியாக வருவேன். அப்போது என்னை வழிபட்டு உமது தரித்திரத்தை போக்கி கொள்ளுங்கள்,” என்று அருளினார்.

பிரார்த்தனை

                       குடும்பத்தில் ஏற்படும் வறுமை, குழப்பங்கள், தரித்திரத்தை போக்கி கொள்ளவும்,அடுத்தவர்களை பரிகசிப்பதை நிறுத்திக் கொள்வதோடு துன்பங்களை போக்கவும் இக்கோயிலுக்கு சென்று வழிபடலாம்.
நேர்த்திக்கடன்
                  தங்களது கோரிக்கை நிறைவேறியவுடன் சிவனுக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம், ஆராதனை செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
தல சிறப்பு
                      மிகவும் பழமையான இந்த கோயிலுக்கு கிழக்கு, வடக்கு என இரு வாயில்கள் இருந்தாலும் அம்மன் நோக்கியிருக்கும் வடக்கு வாசல் தான் பிரதான வாசல்.

கோயிலில் நுழைந்தவுடன் கொடிமரம் தாண்டி உள்ள மண்டபத்தில் துவார பாலகிகள். இவர்களுக்கு இடதுபுறம் கணபதி, சரஸ்வதி, பிரம்மா. வலதுபுறம் முருகன், லட்சுமி, விஷ்ணு. இவர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் தரிசிக்க நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அதே போல அடுத்துள்ள மண்டபத்தில் சிவகாமி சமேத நடராஜரும், பாணலிங்கமும் இருக்க அருகே ஆதிகாலத்து உக்கிர காளி தற்போது சாந்த சொருப காளியாக வீற்றிருக்கிறார்.

மேலும் ஐந்துமுகம், பத்து கைகள், முன்று பாதங்களுடன் காயத்ரி தேவி வீற்றிருக்க, அருகே ஏகாம்பரேஸ்வரர் தனி சன்னதியில் கிழக்கு நோக்கி தரிசனம் தருகிறார்.அன்னை காமாட்சியே, பிற சிவ ஆலயங்களில் கிழக்கு அல்லது தெற்கு நோக்கி வீற்றிருக்கிறார். இங்கு காமாட்சியையும், ஏகாம்பரேஸ்வரரையும் ஒரே இடத்தில் நின்று கொண்டு தரிசித்து, இருவரின் அருளையும் ஒரே சமயத்தில் பெறலாம். இக்கோயில் சுவாமிகளின் அலங்காரம் மிகவும் சிறப்பான அம்சமாகும்.

கோயில் சுற்றுப்பிரகாரத்தில் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி, ஆஞ்சநேயர், தட்சிணாமுர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை, சண்டிகேசுவரர் இருக்க, ராமலட்சமணருக்கு உதவிய நளபிரம்மா தனி மண்டபத்தில் வீற்றிருக்கிறார்.