2017 வைகாசி மாத தனுசு ராசி பலன்கள்

ஐந்து, ஒன்பதுக்குடைய யோகாதிபதிகள் சூரியனும், செவ்வாயும் ஆறாமிடத்தில் மறைந்தாலும் இவர்கள் இருவரையும் ராசிநாதன் குரு பார்ப்பதால் வைகாசி மாதம் உங்களுக்கு நல்ல மாதமே.

ஆனாலும் யோகாதிபதிகள் மறைவதால் எல்லா விஷயங்களிலும் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத மாதமாக இது இருக்கும். இளைய பருவத்தினர் எதிலும் நேர்மையை கடைப்பிடிப்பது நல்லது.

தேவையற்ற வீண்பழி, கைப்பொருள் திருட்டுப் போகுதல் போன்ற பலன்கள் நடக்கும். செல்போன் பத்திரம்.

அலுவலகத்தில் டிரான்ஸ்பர், பதவிஉயர்வுடன் கூடிய இடமாற்றம் போன்றவைகள் இருக்கலாம்.

சிலருக்கு கம்பெனி சார்பில் வெளிநாடு பயணங்கள் இருக்கும். அதனால் நன்மைகளும் இருக்கும். இளைய பருவத்தினருக்கு இண்டர்வியூ அழைப்பிற்கான கடிதங்கள் வரும். ஆனால் வேலைதான் இழுத்தடிக்கும்.

தாயார் வழியில் நன்மைகளும், அம்மாவின் ஆசிர்வாதங்களும் இந்த மாதம் உண்டு. குறிப்பிட்ட சிலருக்கு தாய்வழி சீதனம் போன்று ஏதேனும் கிடைக்க வாய்ப்புகள் இருக்கிறது.

சனி ராசியில் இருப்பது சிலருக்கு கெடுபலன்கள் எதுவும் நடக்காவிட்டாலும் ஏதேனும் தவறாக நடந்துவிடுமோ என்ற மனக்கலக்கத்தை தரும்.

குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும் என்பதால் செலவுகள் அதிகமாக இருக்கும். எனவே குடும்பத்தில் சேமிப்பு இருக்க வேண்டியது அவசியம். யாரிடமும் தேவையற்ற வீண் வாக்குவாதம் வைத்துக் கொள்ள வேண்டாம்.

நல்ல நண்பர்களும் சிறு பிரச்னைகளால் இந்தமாதம் எதிரிகளாக மாறுவார் எனபதால் தேவையற்ற பிரச்னைகளில் தலையிட வேண்டாம்.